“பரிவர்த்தனையின் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்ச்சி”

Organization: Parivarthanai Worldwide Social Welfare Organisation
Organiser: “Rain-Invoking” Kali K. Sudarson
Regd Office: No 18, Basement, 23,Ramanathan Street, T.Nagar, Chennai 600017
Chennai, Tamilnadu, India
Phone: +91 9841360340
Email: parivarthanai.org@gmail.com
Website: https://parivarthanai.org
info@parivarthanai.org
Mobile/WhatsApp +91- 9841 360 340
உதவுதல் உன்னத நிலை;
அதுவே உலகத்தில் உயர்ந்த நிலை!
“மழை வேண்டி புகழ்”காளி. K. சுதர்சன்
இப்பரந்த உலகத்தில் தோன்றும் ஒவ்வொரு உயிர்களிடத்தில் பிறப்பு–இறப்பு என்னும் இயற்கை நியதியின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி. ஆனால், பிறந்தவர்களில் சிலர் மட்டுமே இறந்த பின்னரும் மக்களின் நினைவில் நிலைத்து வாழ்கின்றனர். அதற்குக் காரணம் பிறருக்கு அவர்கள் செய்த நற்செயல்களும், உதவிகளும் ஆகும்.
பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மனிதன் மக்களின் இதயங்களில் நிலைத்து வாழ்கின்றான். அதனால் தான் சிலரை “இறந்தும் வாழ்பவர்” என்று போற்றுகிறோம். மாறாக, தமக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் மறைந்த பின்னர் காலப்போக்கில் மறக்கப்படுகின்றனர்.
பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டி, சொல்லெல்லாந் தெரியச் சொல்லித் துணைக்கரம் விரித்து நீட்டி, கையெந்தி வரக் கூடியவர் தான் இறந்தவருக்குச் சமம்; உலகத்தில் கொடையாளி என்றும் வாழ்கின்றான்”
இவ்வுலகில், பிறருக்காக வாழ்ந்து உதவும் மனிதனே உண்மையில் மரணத்தையும் தாண்டி நிலைத்து நிற்பவன். உதவுதல் மனித வாழ்வின் உன்னத பண்பாகும்.
மாறாக, தமக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் உயிருடன் இருந்தாலும் பயனற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
“ஏழைக்கு இரங்கு”
நம்மிடம் எவ்வளவு செல்வமோ, பொருளோ இருந்தாலும்
தேவைப்படுவோருக்கு வழங்க வேண்டும். பிறரது துன்பத்தை உணர்ந்து உதவும் மனப்பான்மையே மனிதநேயத்தின் அடையாளமாகும்.
ஆனால், கையில் பொருள் இருந்தும் கொடுக்க மனம் இல்லாதவர்களைப் பற்றி என்ன கூறுவது?
ஒரு நாய் கூட தனது எஜமானுக்காக வேட்டையாடி உதவி செய்கிறது. அதுபோல் மனிதன் பிறருக்கு பயனளிக்க வேண்டும். செல்வம் இருந்தும் ஏழைகளுக்கு உதவாதவன், பெரிய மரமாக இருந்தும் பழம் தராத மரத்தைப் போன்றவன். தண்ணீர் இல்லாத குளம் எவ்வாறு யாருக்கும் பயன்படாததோ, அதுபோல அவனுடைய செல்வமும் பயனற்றதாகி விடுகிறது.
மேலும், கல்லால் செய்யப்பட்ட பசு எவ்வளவு அழகாக இருந்தாலும் அதிலிருந்து பால் கிடைக்காது. அதுபோல, செல்வம் நிறைந்திருந்தும் ஈகை இல்லாதவன் பிறருக்கு எந்த நன்மையும் செய்யாதவனாகவே இருப்பான்.
“உடல் நிலையானது அல்ல; அது நீர்மேல் தோன்றும் குமிழியைப் போன்றது. செல்வமும் மின்னலைப் போல ஒரு கணத்தில் மறைந்து போகக்கூடியது”
வாழ்க்கையும் செல்வமும் நிலையற்றவை என்பதை அறிந்ததும், யாருக்காவது தானம் அளிக்க வேண்டும் என்று கூறினால், சிலர் அதிலிருந்து விலகிச் செல்ல முயல்கிறார்கள். பிறருக்கு உதவுவதிலும், கொடுப்பதிலும் விருப்பமில்லாமல் இருப்பது இறைவனிடத்தில் உண்மையான அன்பு இல்லாததற்கான அடையாளமாகும்.
இறைவனை நேசிப்பவன் அவனுடைய படைப்புகளையும் நேசிக்க வேண்டும். பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவுவது, வறியவர்களுக்கு உதவுவது, ஆகியவையே உண்மையான இறைபக்தியின் வெளிப்பாடுகளாகும். ஈகை மற்றும் கருணையுடன் வாழ்வதே உயர்ந்த கடமையாகும்.
பிறருக்கு உதவும்போது, “நான் உதவி செய்தேன்” என்ற அகங்கார எண்ணம் மனதில் தோன்றக்கூடாது. இறைவன் நமக்குக் கொடுத்த செல்வம், அறிவு, ஆற்றல், ஆகிய அனைத்தும் பிறருக்கு நன்மை என்பதை உணர வேண்டும்.
இறைவன் நமக்குக் அளித்தவற்றை, அவன் படைத்த உலகத்தில் உதவுவதற்காகவே என்ற மனப்பான்மையுடன் உதவி செய்ய வேண்டும்.
பிறருக்கு உதவுவது வெறும் அறச்செயல் மட்டுமல்ல, அது மனிதநேயத்தின் வெளிப்பாடாகும். கருணை, இரக்கம், ஈகை, அன்பு ஆகிய பண்புகள் மனித வாழ்க்கையை உயர்வுறச் செய்கின்றன. நமது வாழ்க்கையின் குறிக்கோள் பிறரின் துன்பத்தை உணர்ந்து, அவர்களின் நலனுக்காகச் செயல்பட்டு, இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு பாடுபட வேண்டும்.
இதுவே படைப்புகளின் வாழ்வு உயர்வுற உண்மையான வெற்றியும் ஆகும்.
சுத்தானந்த பாரதியார் அவர்களின் உயர்ந்த சமூகக் கனவான மனிதநேயம், சமத்துவம், சுதந்திரம் மற்றும் அறநெறி நிறைந்த சமுதாயம்.
• ஏழை எளியவர்கள் பசியின்றி வயிறார உணவு உண்டு நலமாக வாழ வேண்டும்.
• செல்வந்தர்கள் ஆணவத்தையும் தற்பெருமையையும் கைவிட வேண்டும்.
• சாதி, மத பேதங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் தீமைகள் முற்றிலும் ஒழிய வேண்டும்.
• அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
• வலிமை வாய்ந்தவர்கள் பலவீனமானவர்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது.
• பொய், வஞ்சனை மற்றும் அநீதி சமூகத்திலிருந்து அகல வேண்டும்.
• வறுமை, அறியாமை, அடிமைத்தனம் போன்ற சொற்களே இல்லாத நிலை உருவாக வேண்டும்.
• நோய், துயரம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய குணங்கள் வேரோடு அழிய வேண்டும்.
• வீரமும், சுதந்திர உணர்வும், செயலாற்றும் திறனும் மக்களிடையே வளர வேண்டும்.
• தீய சக்திகள் அழிந்து, நன்மை வெற்றி பெற வேண்டும்.
• இந்த நாட்டில் அறம், நீதி, அன்பு ஆகியவை ஆட்சி செய்யும் நிலை உருவாக வேண்டும்.
கவிஞர் சுத்தானந்த பாரதியார் காண விரும்பும் உலகம்:
பசி இல்லாத உலகம்,
பேதம் இல்லாத சமூகம்,
வறுமை இல்லாத வாழ்க்கை,
பொய் இல்லாத மனிதநேயம்,
அன்பும் சமத்துவமும் நிறைந்த நாடு.
சுத்தானந்த பாரதியாரின் இந்தக் கனவு, ஒவ்வொரு மனிதரும் பிறருக்கு உதவி செய்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்தால் நனவாகும்.
“அன்பும் கருணையும் ஈகையும் நிறைந்த வாழ்வே மனித வாழ்வின் உயர்ந்த நோக்கம்”
திருவள்ளுவர் இந்த உண்மையை மிகத் தெளிவாக
“ஒத்த அறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.”
— திருக்குறள் 214
உலக இயல்பை அறிந்து, பிறருடன் ஒத்து வாழ்ந்து, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து உதவும் அறிவுடையவனே உண்மையில் உயிருடன் வாழ்பவன். மற்றவர்களுக்கு உதவாமல், சுயநலத்துடன் வாழ்பவன் உயிருடன் இருந்தாலும் இறந்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.
இங்கு “ஒத்த அறிவான்” என்பது உலக நெறியை உணர்ந்து, பிறருடைய துன்பத்தைத் தன்னுடையதாகக் கருதி, ஒப்புரவு செய்து வாழ்பவனை சமூகத்திற்கு பயனுள்ளவனாகவும், மக்களின் மனதில் நிலைத்து வாழ்பவனாகவும் இருக்கிறான்.
“மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்பதன் மூலம், பிறருக்கு எந்த நன்மையும் செய்யாமல் தனக்காக மட்டும் வாழ்பவன் உயிரோடு இருந்தாலும், மக்களின் மனதில் இறந்தவனுக்கு ஒப்பானவன்.
பிறருக்கு உதவி செய்து, ஒப்புரவுடன் வாழ்பவனே உண்மையில் வாழ்பவன்.
சுயநலத்துடன் வாழ்பவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
“பிறருக்கு உதவுதல் மனித வாழ்வின் உயர்ந்த அறமாகும், ஈகையும் கருணையும் மனிதனை மரணத்திற்குப் பின்னரும் வாழ வைக்கும்.”
செய்ய வேண்டிய கடமையை அறிந்தும், இப்பரந்த உலகத்தில் பலர் பிறர் பொருள்மீது ஆசை கொண்டு, பிறருக்கு உதவாமல், தாம் பெற்ற இன்பத்தையே பெரிதாகக் கருதி வாழ்கின்றனர். தமது நலனையே முன்னிறுத்தி, பிறரின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் வாழும் மனப்பான்மை மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கு எதிரானதாகும்.
ஆனால் மனிதன் வாழ்வின் உண்மையான அர்த்தத்தை உணர வேண்டும். பிறருக்கு உதவுதல், வறியவர்களுக்கு துணை நிற்பது ஆகியவையே உயர்ந்த நிலைக்கு உயர்த்துகின்றன.
“உதவுதல் உன்னத நிலை;
அதுவே உலகத்தில் உயர்ந்த நிலை”!
என்ற உண்மையை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறர் நலனுக்காகச் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் வாழ்பவர்களே உண்மையில் மரணத்திற்குப் பின்னரும் வாழ்பவர்கள். அவர்கள் உடலால் மறைந்தாலும், அவர்கள் செய்த நற்செயல்கள் இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இவ்வுலகில் செயலாற்றி வாழ்பவர்களே இறந்தும் இறவாதவர்கள். அவர்கள் தமது கருணை, ஈகை, அன்பு மற்றும் அறச்செயல்களின் மூலம் பிறர் நெஞ்சங்களில் நிலையான இடம் பெறுகின்றனர். இத்தகைய பெருமக்கள் உண்மையானவர்களாக விளங்குகின்றனர்.
அவர்கள் சென்ற அறவழியை பின்பற்றி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து, அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதன் மூலம் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம்.
எனவே, கருணை, ஈகை, ஒப்புரவு ஆகிய பண்புகளை வளர்த்து, பிறர் நலனுக்காக வாழ்வோம். அப்போது தான் நமது நற்செயல்களால் இவ்வுலகில் உள்ளவர்களில் உள்ளங்களில் உண்மையான “இறவா நிலை”என்றும் நிலைத்திருக்கும்.
தழைத்து ஓங்கட்டும் ஆன்மீகம்!
எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்!
எவ்வுயிர்களும் ஒன்றே எனப் போற்றுவோம்!
அவ்வுயிர்களிடத்தில் அன்பை விதைப்போம்!
அருளும் கருணையும் மனங்களில் வளர்ப்போம்!
பேதமின்றி அனைவரையும் நேசிப்போம்!
பிறர் துயரைக் கண்டு இரங்கி உதவிப்போம்!
இன்பமும் அமைதியும் உலகில் மலரச் செய்வோம்!
அன்பே ஆன்மீகத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து,
அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வேண்டுவோம்!!!
எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி அன்பு செலுத்துவதே உண்மையான சிறந்த பண்பாகும்.
அவ்வுயிர்களின் நலனுக்காக செயல்படுவது அதைவிட உயர்ந்ததாகும்!!!.
உதவுதல் மனப்பான்மை கொண்டவர்களே,
இவ்வுலகில் உயர்ந்த நிலையானவர்கள்!
பரிவர்த்தனை உலகப் பொது நல்லோர் இயக்கம்
“மழை வேண்டி புகழ்”காளி. K. சுதர்சன்
05032003