உன்னை நீ உணர்!

“பரிவர்த்தனையின் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்ச்சி”

உலக பொதுசேவை நல்லோர் இயக்கம்
உலக பொதுசேவை நல்லோர் இயக்கம்

Organization: Parivarthanai Worldwide Social Welfare Organisation
Organiser: “Rain-Invoking” Kali K. Sudarson
Regd Office: No 18, Basement, 23,Ramanathan Street, T.Nagar, Chennai 600017
Chennai, Tamilnadu, India
Phone: +91 9841360340
Email: parivarthanai.org@gmail.com
Website: https://parivarthanai.org
info@parivarthanai.org
Mobile/WhatsApp +91- 9841 360 340

உன்னை நீ உணர்!
உன்னில் உள்ளதை உணர்வாய்!
தன்னை உணர்ந்தவன் தரணியில் உயர்வான்!
“மழை வேண்டி புகழ்” காளி.K.சுதர்சன்

இப்பரந்த உலகத்தில் தோன்றுகின்ற உயிர்கள் அனைத்தும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றன.நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் செயல் வடிவால் அனைத்து ஜீவராசிகள் இயங்குகின்றது.இவ்வைந்து பூதங்களின் தத்துவத்தால் மனிதன் ஆறாம் அறிவு எனும் சிந்திக்கும் செயல்பாடு கொண்டு விளங்குகிறான்.

இன்றைய உலகத்தில் உள்ள மனிதர்களோ பஞ்சபூதங்களேயன்றி வேறில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ள செயல்களோ, இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் தனக்கே என்ற எண்ணம் கொண்டு பவனி வருகின்றான்.

அவன் இவ்வுலகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்கள்தான் என்ன?

ஒவ்வொரு (உயிர்கள்) மனிதனுடைய துன்பத்தில் பங்கு கொண்டு, அவனுடைய துன்பத்தை களையத் தன்னையே அவனுடைய துன்பத்தில் இருத்தி நாம் செயல் புரிய வேண்டுமேயன்றி, மற்றவர்களுடைய இன்பத்தில் துன்பம் விளைவிப்பதல்ல!

இவ்வுலகத்தில் தோன்றியுள்ள மனிதன் இந்த உலகத்தில் ஏதேனும் நற்செயல் புரிய வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் தோன்ற வேண்டும்.

ஆனால் இந்த உலகத்தில் உள்ள மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏதேனும் தீங்கு விளைவித்துக் கொண்டுதான் வருகின்றார்கள். அந்தத் தீங்குகளை விளைவித்து வருவதிலும் ஒவ்வொருவரும் சாதி, மதம், இனம் சார்ந்த நிலையில்தான் செயலாற்றுகின்றனர். எல்லாம் தன் சுயநலத்திற்காகவே அன்றி மற்றவர்களின் நலத்திற்காக அல்ல! ஒவ்வொருவரின் உள்ளத்தில் உள்ள சாதி, மதம் எனும் போர்வையை களைந்து மனிதநேயம் மலர நாம் முயல வேண்டும்.

“சாதி இரண்டொழிய வேறில்லை சான்றுங்கால் நீதி வழுவா நெறிமுறைக்கு”

என்னும் மூதுரையில், தருமியிடத்தில் கருமி இல்லை, கருமியிடத்தில் தருமி இல்லை. அதாவது ஈகைக் குணம் கொண்டவர் (பிறருக்கு தன்னலம் கருதாது உதவுபவர்) பெரியோரும், தன்னிடத்தில் தனம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாதவர்கள் சிறியோரும் (கருமி) ஆவர். சாதி என்பது இவ்விரண்டேயன்றி வேறில்லை என்பதை உறுதியாக உரைக்கின்றனர்.

ஆனால், இன்றைய சமுதாயகத்தில் பல சாதிகள் மற்றும் மதங்கள் உள்ளன. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் இறைவன் ஒருவனே சாதிகள் இரண்டே என்னும் நிலையில் இதனையே நாம் என்றும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் தோன்றியுள்ள மனிதன் எனும் பஞ்சபூதங்கள் தான் செய்யும் தீய செயல்களால் இவ்வுலகிலுள்ள நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களின் நற்செயல்ப்பாட்டினைத் தடுக்கும் நோக்கத்துடன் இவ்வுலகில் என்றென்றும் செயலாற்றுகின்றான்.

இவ்வுலகிலுள்ள பஞ்சபூதமான மனிதன் பொய், பொறாமை, களவு, அகந்தை (ஆணவம்) என்னும் குணங்களுடன் பொய்யுடன் பிறரை ஏமாற்றிப் பிழைத்தல், வஞ்சித்தல், களவு என்னும் செயலுக்கு பிறர் பொருளைத் திருடுதல், அபகரித்தல், பொறாமை என்னும் செயலுக்கு பிறர் வாழ்வதை விரும்பாமை, பிறர் நலன் நாடாமை, பிறருக்கு உதவாமை, அகந்தை என்னும் ஆணவமோ சுயக்கட்டுப்பாட்டினை இழந்து எவருக்கும் அடங்காமை, தான் செய்யும் தீய செயலுக்கு நியாயம் கற்பித்தல், இவ்வுலகம் தனக்கே என்ற எண்ணம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மனிதன் என்னும் பஞ்சபூதம், இவ்வுலகில் உள்ள உயிர்களை வீழ்த்தும் கோடாரியாகத்தான் இன்றைய உலகத்தில் பவனி வருகின்றான்.

இதனால் இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கு நன்மையா?

தானே இவ்வதிகாரங்களை கையில் ஏந்தி இவ்வுலகில் உள்ள உயிர்களைத் துன்புறுத்துவதற்கு இவர்கள் யார்?

இவையனைத்தும் மனிதன் என்னும் பஞ்சபூதங்களின் இச்செயல்பாட்டினால், இவ்வுலகினைப் படைத்த இறைவன் (இயற்கை) என்னும் பஞ்சபூதம் தன்னிலையான சாந்த சொரூபத்தினை மாற்றி, இவ்வுலகில் உள்ள நீர் என்ற பூதங்களில் ஊழி அலைகள் (சுனாமி) பெருவெள்ளம், தொடர் மழை என என்றென்றும் இப்புவியில் உள்ள உயிரினைத் தாக்கியும், நிலம் என்ற பூதம் பிறர் பொருளை அபகரித்ததால் ஏற்பட்ட கொந்தளிப்பே, இவ்வுலகில் பூகம்பம் என்னும் நிலநடுக்கத்தில் நாம் அபகரித்ததை விழுங்கியும்,காற்று என்னும் பூதங்களில் இன்றைய நாகரிக உலகில் உள்ள பஞ்சபூதமான மனிதன் காற்றினில் நஞ்சினைப் புகுத்தி அதனை மாசுபடுத்தி, எவ்வுயிர்களும் தங்குவதற்குத் தடையாகத் தானே செயலாற்றி, வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வருவதில் முதன்மையானவன்.

நெருப்பு என்னும் பூதங்களால் இவ்வுலகில் உள்ள பிற பூதங்களின் செயல்பாட்டினை தடுத்து, இன்றைய புவியுலகில் உள்ள அனைத்து உயிர்களை சுட்டெரிக்கும் சுடரொளியாக (அணுக்கதிர்) செயலாற்றுவதற்கு உறுதுணையாக மனிதன் என்னும் பஞ்சபூதங்கள் செயற்கரிய செயல்புரிவதை ஆகாயம் (இறைவன்) என்னும் பூதம் இவ்வனைத்தும் அறிந்து, இவ்வுலகில் உள்ள பூதங்களின் இச்செயல்பாட்டினைத் தடுக்க இயலாமல் விலகி, விலகிச் சென்று எட்டாத உயரத்தில் நம் செயலினை நினைத்து எள்ளி நகையாடுகின்றது.

ஆம்! மனிதன் என்னும் பஞ்சபூதங்கள் எதற்காகப் படைக்கப்பட்டன?

இயற்கை என்னும் பஞ்சபூதங்களின் இச்செயல்பாட்டினைத் தடுக்கும் நோக்கத்துடன் நம்மில் உள்ள இத்தீய செயல்களை களைந்து, இவ்வுலகில் தர்மச் சிந்தனையை நிலைபடுப்படுத்தி செயலாற்றினால், இறைவன் என்னும் பஞ்சபூதம் என்றும் மாறாமல் சாந்த சொரூபமாக தன்னிலை கொள்ளும்.

இவ்வுலகில் தோன்றியுள்ள மனிதனே! பஞ்சபூதங்கள் அனைத்தும் ஒன்றே என்ற உன்னத எண்ணத்துடன் பிறர் நலன் பேணி காத்தல், இல்லாதவர்களுக்கு இருப்பவர் அளித்தல், நன்மைகள் அனைத்தையும் உயிர்களுக்குப் புரிதல்,
நம்மிடத்தில் உள்ள தர்மச் சிந்தனையைத் தன் நித்திய கடமையாக நிலைக் கொள்ள வேண்டுமென்று எவன் ஒருவன் இச்செயலை நிலைநாட்டப் போராடுகின்றானோ,
அவனைத்தான் இவ்வுலகில் உள்ள அனைவரும் தொடர்வார்கள் என்பதை அறிந்து நாம் அனைவரும் தர்மச் சிந்தனையை இவ்வுலகம் உள்ள வரை தொடர்வோம்!

வாருங்கள் இங்கு உதித்த நல்லோர்களே!
இவ்வுலகினைச் சீர்படுத்துவோம்!
பிற உயிர்கள் உய்ய வேண்டுமெனப் போராடுவோம்!
எவ்வுயிரும் ஒன்றே என்ற உன்னத
எண்ணத்துடன் செயலாற்றுவோம்!
இவ்வுலகில் என்றென்றும் நற்செயல் புரிந்து,
பிறர் மனங்களில் நிரந்தரமாக வாழ்வோம்.

இவ்வுலகில் உள்ள அனைவரும் இணைந்து, எல்லாம் வல்ல பஞ்சபூதமான இறைவனிடத்தில் இவ்வுலகம் உய்யும் பொருட்டு உன்னத நோக்கத்துடன் உலக நலனுக்காக தர்மச் சிந்தனையை விரிவுபடுத்தி, நாம் அனைவரும் உறுதுணை புரிந்து, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நற்செயலுக்கு…

“வேட்கை உடையீர்! விரைந்து ஒல்லை
உண்ணன்மின்.” — திருமூலர்

காகம் தனக்குக் கிடைத்த இரையினை தனித்து உண்ணாமல் பிற உயிர்களையும் அழைத்து உண்ணும் என்ற இவ்வுயிரின் உயர்ந்த செயலினைப் பின்பற்றி, “உன்னை நீ உணர் ! உன்னில் உள்ளதை உணர்வாய்! தன்னை உணர்ந்தவன் தரணியில் உயர்வான்!” என்ற நிலையில் என்றென்றும் உயர்வடைவோம்!!!

வாருங்கள் இங்கு உதித்த நல்லோர்களே!
தர்மம் நிலைபெற அனைவரும் இணைந்து,
பஞ்சபூதம் என்னும் இறைவனை சாந்த சொரூபமாக
திகழ வேண்டும் என வேண்டுவோம்!
எவ்வுயிர்களும் ஒன்றே எனப் போற்றுவோம்!
அவ்வுயிர்களிடத்தில்
அன்பினைப் போதிப்போம்!

பரிவர்த்தனை உலகப் பொது நல்லோர் இயக்கம்
“மழை வேண்டி புகழ்”காளி. K. சுதர்சன்

05012003